மொட்டுப்பாறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி


மொட்டுப்பாறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 17 Jun 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

மொட்டுப்பாறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மொட்டுபாறை. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் ஆழ்துளை குழாயில் ஒரு குடம் தண்ணீர் எடுக்க வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கடும் சிரமம்

கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதி அடைந்து வருகிறோம். ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. குடிக்க தண்ணீர் எடுக்க இரவே, தொட்டி அருகில் குடங்களை வைத்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடிவதில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வாகனங்கள் எடுத்து வருகிறோம். மின்மோட்டார் பழுது ஏற்பட்டால் சீரமைக்க 3 மாதங்களுக்கு மேலாகிறது.

மேலும், டிராக்டர் மூலம் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஒரு டிராக்டர் குடிநீர் ரூ.900-ம், பிற தேவைகளுக்கான தண்ணீர் ரூ.700-க்கு வாங்கும் நிலை உள்ளது. மேலும், மாதம் ஒரு முறை துணிகளை, அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு சென்று துவைத்து எடுத்து வருகிறோம். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் பதித்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story