முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 காலியிடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 காலியிடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Jun 2019 5:39 PM IST (Updated: 17 Jun 2019 5:39 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (சி.டி.எஸ்.-2019(2)) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 417 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 100 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும், சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் 225 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-7-1996 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் 1-7-2019 தேதியில் 20 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் சேரும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப் படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் சேருபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 8-7-2019. தேர்வுக்கான கட்டணங்களை ஆப்லைன் முறையில் 7-7-2019-ந் தேதிக்குள்ளும், ஆன்லைன் முறையில் 8-7-2019-ம் தேதிக்குள்ளும் செலுத்தவேண்டும். இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story