எம்.எல்.ஏ. தலைமையில் தொகுதி மக்கள் திரண்டுவந்து மனு கொடுத்தனர் முதியோர், விதவை உதவித்தொகை வழங்க கோரிக்கை
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அணைக்கட்டு தொகுதி மக்கள் 100-க்கணக்கானோர், எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்து முதியோர், விதவை உதவித்தொகை வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக அணைக்கட்டு தொகுதி மக்கள் 100-க்கணக்கானோர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் தலைமையில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த 1,952 மனுக்களை கட்டுக்கட்டாக கட்டி எடுத்து வந்திருந்தனர்.
அவர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கலெக்டர் ராமனிடம் தாங்கள் கட்டுக்கட்டாக கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுக்களை கொடுத்து, கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
பின்னர் இதுகுறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தி.மு.க. சார்பில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது. அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அதில் சட்டமன்ற உறுப்பினரால் செய்யக்கூடியவற்றை நான் செய்துவிட்டேன். அதாவது 245 கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், 100 நபர்களுக்கு தையல் எந்திரங்கள், 40 பேருக்கு சலவைப்பெட்டி, 10 நபர்களுக்கு 3 சக்கர சைக்கிள் ஆகியவை வழங்கி உள்ளேன்.
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா ஆகியவை அரசால்தான் வழங்க முடியும். இந்த கோரிக்கைகள் அடங்கிய 1,952 மனுக்கள் இன்று (நேற்று) கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 64 ஆழ்துளை கிணறுகள் இருந்தன. அதில் 45 ஆழ்துளை கிணறுகளை காணவில்லை. அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்றுவிட்டனர். அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுகாஞ்சி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணனின் மனைவி தமிழ்செல்வி (வயது 28) என்பவர் தனது 2½ வயது மற்றும் 1½ மாத பெண் குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில் தான் கர்ப்பிணியாக இருந்த போது 6 மாதத்திற்கு முன்பு தனது கணவர் இறந்துவிட்டதாகவும், இதனால் குழந்தைகளை காப்பாற்ற மிகவும் கஷ்டப்படுவதாகவும், அரசு தனக்கு விதவை உதவித்தொகை வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
காட்பாடியை அடுத்த அருப்புமேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்துள்ள மனுவில் அருப்புமேடு கிராமத்தின் அருகில் உள்ள வீட்டுவசதிவாரியத்துக்கு சொந்தமான விளையாட்டுத்திடலை இளைஞர்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது இந்த விளையாட்டுத்திடலை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து ஒப்பந்த பணிகளுக்கான பொருட்களை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுத்தோம். அப்போது அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை. இதனால் விளையாட்டுத்திடல் முழுவதும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விளையாட்டுத்திடலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story