திருவண்ணாமலை அருகே 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர், விநாயகர் சிலைகள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை அருேக 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர், கதிர் விநாயகர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த தி.வலசை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன், சதீஷ் ஆகியோர் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட சிலைகள் கிடப்பதாக திருவண்ணாமலை தொல்லியல் மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மையத்தின் தலைவர் நீதிதாஸ் விஜயராஜ், துணைத்தலைவர் மதன்மோகன், இணை செயலாளர்கள் பழனிசாமி, வெங்கடேஷ் மணி, பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் இயக்குனர் ஹரிஹரன் ஆகியோர் கொண்ட குழு அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் மற்றும் கதிர் விநாயகர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் ராஜவேலு மற்றும் தமிழ் தொல்லியல் மையத்தினர் கூறியதாவது:-
முருகர் மற்றும் நான்கு கைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் பல்லவர் காலத்தை சேர்ந்தது. தாமரை மலரின் மேல் நின்ற நிலையில் இருக்கும் முருகர் சிலையானது மிகவும் அரிதான ஒன்று. ஆறுமுகங்களுடன் கூடிய சிலையாகவும், ஆனால் மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வகையிலும் இச்சிலை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
முருகர் சிலையின் மேற்புறம் சேவல், மயில் காணப்படுகிறது. முருகர் சிலையின் இடது கையில் வில்லானது திருப்பி பிடித்து வைத்திருப்பதன் மூலம் இச்சிலையை போருக்கு பின்னரான காட்சியாக சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். முருகரது உடையலங்காரங்கள் அப்போதைய உள்ளூர் வழக்கப்படி வடிவமைத்திருக்கிறார்கள். இடது பக்கம் ஒரு சிறிய சேவகரின் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. பாதத்தின் கீழ் பகுதியில் தாமரை மொட்டுக்களும் காணப்படுகிறது.
முருகர் சிலையின் வலது கீழ்ப்புறத்தில் ஏழு வரிகளுடன் கூடிய சிறிய எழுத்து பகுதியும் இடம் பெற்றுள்ளது. இதை படிப்பதில் சற்று சிரமம் இருப்பதனால், அதை படிப்பதற்கு கல்வெட்டியல் அறிஞர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே முழுவிவரங்கள் தெரியவரும்.
மேலும் அங்கு செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. இதுகுறித்து மாநில தொல்லியல் துறைக்கும் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story