உளுந்தூர்பேட்டை அருகே, கிணற்றில், தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர் - கொலையா? போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் அய்யனார்(வயது 24). இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யனார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அய்யனாரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை.
இந்த நிலையில் அதே ஊரில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கால் தரையை தொட்டபடி, அய்யனார் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி திருநாவலூர் போலீசாருக்கும், கோவிந்தனுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் கிடந்த அய்யனாரின் உடலை வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே கோவிந்தன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து அய்யனாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தொடர்ந்து அய்யனாரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அய்யனார், அதே ஊரை சேர்ந்த 3 நண்பர்களுடன் மது அருந்த சென்றதும், பின்னர் சந்தேகத்திற்கிடமான வகையில் கிணற்றில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து கிணற்றில் தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அய்யனாரின் நண்பர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிணற்றில் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story