கர்நாடகத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதி


கர்நாடகத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 18 Jun 2019 5:00 AM IST (Updated: 17 Jun 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

பெங்களூரு, 

சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர்கள் மீது நோயாளியின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, 17-ந் தேதி (நேற்று) நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்தது.

கர்நாடகத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், “அரசு டாக்டா்கள் நோயாளிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டாக்டர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தது.

திட்டமிட்டப்படி நேற்று கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாநில அரசு விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, கித்வய் அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டாக்டர்கள் பாதி பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மீதமிருந்த டாக்டர்கள் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியபடியே பணியாற்றினர்.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் நிமான்ஸ் மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக நிமான்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் அதிகளவில் நோயாளிகள் குவிந்திருந்தனர். அவர்கள் பெரும்பாலானர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். டாக்டர்கள் இல்லாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

உள்நோயாளிகளுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு நர்சுகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை கவனித்துக் கொண்டனர். ஆனால் புறநோயாளிகள் பிரிவு நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அந்த மருத்துவமனைகளின் டாக்டர்கள் வெளியே வந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் டவுன் ஹால் முன்பு கூடிய டாக்டர்கள், கைகளில் பேனர்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கர்நாடகத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் குவிந்ததால், டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திண்டாடினர்.

பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகர், ஹாசன், துமகூரு, மண்டியா, பெலகாவி, உப்பள்ளி, தார்வார், கலபுரகி, விஜயாப்புரா, சிவமொக்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. புறநோயாளிகள் பிரிவில், டாக்டர்கள் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடையே முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட பதிவில், “டாக்டர்கள் மீது நடைபெறும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். 3 நாட்களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கையை மாநில அரசு வெளியிட்டு, டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதனால் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து இந்திய மருத்துவர்கள் சங்க கர்நாடக தலைவர் டாக்டர் தன்பால் கூறுகையில், “கர்நாடகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளன. சிறிய அளவிலான கிளினிக்குகளும் மருத்துவ சேவையை நிறுத்திவிட்டன. அவசர நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது” என்றார்.

Next Story