கும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1½ லட்சம் அபராதம்


கும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 7:16 PM GMT)

கும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கும்பகோணம்,

பாலித்தீன் பை, டம்ளர், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் ஆயிகுளம் ரோடு பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கும்பகோணம் நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், முருகானந்தம் ஆகியோர் ஆயிகுளம் ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடை, ஓட்டல்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்து 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

எச்சரிக்கை

கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என நகர் நல அலுவலர் பிரேமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story