புதுக்கோட்டை அருகே துயரம்: குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுமி பலி


புதுக்கோட்டை அருகே துயரம்: குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுமி பலி
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 7:30 PM GMT)

புதுக்கோட்டை அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கும், விவசாயிகள், விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அங்கும், இங்கும் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. சிலர், பணம் கொடுத்து குடிநீர் கேன்கள் மற்றும் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், போதுமான அளவு குடிநீர் கிடைக்காததால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அருகே பெரிய குழியை தோண்டி அதில் கிடைக்கும் சிறிதளவு தண்ணீரை பிடித்து வடிகட்டி பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அந்த குழிக்குள் விழுந்து காயமடைந்து வரும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்த குழியை மூடவும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதேபோல வைத்தூர் கிராமத்திலும் மழை பெய்ததால் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி நின்றது. மழை நின்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரின் மகள் பவதாரணி (வயது 3) அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றாள். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பவதாரணியின் உறவினர்கள், அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பவதாரணி கையில் வைத்திருந்த பை ஒன்று சந்திரசேகரின் வீட்டின் அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே கிடந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த குழியில் இறங்கி பார்த்தபோது, பவதாரணி குழிக்குள் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பவதாரணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். மேலும் குடிநீருக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும், என்றனர்.

Next Story