பிளாஸ்டிக்குக்கு மாறாக பயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் விக்கிரமராஜா பேட்டி


பிளாஸ்டிக்குக்கு மாறாக பயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 7:40 PM GMT)

பிளாஸ்டிக்குக்கு மாறாக பயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

கரூர்,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதை வியாபாரிகள் சங்கம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அனைத்து விவரங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த நிலையில் தற்போது அபராதம் மூன்று முறை விதிக்கப்படும் என்றும் நான்காவது முறை கடைக்கு சீல் வைக்கப்படும் என அரசு அறிவித்தது வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சில தவறு செய்யும் அதிகாரிகள் இந்த அதிகாரம் மூலம் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் நிலை உள்ளது. மேலும் அண்டை மாநிலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பிளாஸ்டிக் பைகள் தமிழகத்தில் நுழையாமல் தடை செய்ய வேண்டும்.

பயோ பைகள்

அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருளான பயோ பைகள் தயாரிப்பதற்கு உரிய மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வர பல மாதங்கள் ஆகிறது. பயோ பைகள் தயாரிப்பதற்கு மூலப்பொருட்கள் கிடைக்க தமிழக அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருள் தயாரிக்க அரசு முன்வராமல் வியாபாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்குவதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. வியாபாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் ஓட்டல்கள் மட்டுமல்லாது மேன்ஷன்கள், தங்கும் விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதில் தங்கியிருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருந்தாலும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தெரு ஓரங்களில் படுத்துக்கொண்டும், தண்ணீருக்காக அலையும் நிலையும் உள்ளது. இந்தநிலையை போக்க அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால் பல்வேறு தொழில் கூடங்கள் மூடும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story