புதுக்கோட்டையில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 8:00 PM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தில் டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து புதுக்கோட்டை அரசு கல்லூரி டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

மேற்கு வங்காளம் மாநிலத்தில் டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மாநிலத்தில் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளை மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுரே‌‌ஷ்குமார் தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் செயலாளர் சலீம், பொருளாளர் ராஜா உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story