தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி


தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஓசூரில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று ஓசூர் வந்தார். இதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தமிழகத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் குடிமராமத்து பணிகள் பெயரளவிற்குதான் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பலத்த மழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி, அவை திறந்து விடப்பட்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பி அந்த தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் ஒழுங்காக நடைபெற்றிருந்தால் வீணாக சென்ற ஆற்று நீரை, வயல்வெளிகளுக்கு கொண்டு சென்றிருக்கலாம்.

ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதாக கூறப்படும் இடங்களில் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. அதனால்தான், என்ன பணிகள் செய்தீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுங்கள் என்று கேட்டோம். இந்த ஆண்டும் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள், எந்த நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது என்ற முழு விவரத்தையும் வெளியிடுங்கள். அப்போதுதான், பணிகள் நடைபெறுகிறதா என்பது மக்களுக்கு தெரிய வரும்.

30 ஆண்டுகளுக்கு பின்னர், தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ஏரிகளும் தண்ணீரின்றி வறண்டு போய்விட்டன. தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக உள்ளாட்சித்துறை தண்ணீருக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தால் இந்தளவிற்கு தண்ணீர் பஞ்சம் வராமல் தடுத்திருக்கலாம்.

கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள அணுக்கழிவு மையத்தால், மக்களுக்கு ஆபத்தில்லையென்றால், அதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அச்சங்களை போக்குவது மத்திய, மாநில அரசின் கடமையாகும். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசின் திட்டங்களை எதிர்க்கிறது, தவறான தூண்டுதலை ஏற்படுத்துகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும், நீர் ஆதாரங்களையும் பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகள் எதிர்த்தால் அவர்களுடன் சேர்ந்து போராடுவது அ.ம.மு.க.வின் கடமையாகும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

அப்போது, கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், கட்சி பிரமுகர் ஜெ.பி.என்ற ஜெயப்பிரகா‌‌ஷ், கிரு‌‌ஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் மாரேகவுடு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story