ஐசரி கணேஷ் முன்கூட்டியே கேட்டு இருந்தால் நடிகர் சங்க தலைவர் பதவியை விட்டு கொடுத்து இருப்பேன் நாசர் பேட்டி


ஐசரி கணேஷ் முன்கூட்டியே கேட்டு இருந்தால் நடிகர் சங்க தலைவர் பதவியை விட்டு கொடுத்து இருப்பேன் நாசர் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஐசரி கணேஷ் முன்கூட்டியே கேட்டு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியை விட்டு கொடுத்து இருப்பேன் என நாமக்கல்லில் நடிகர் நாசர் கூறினார்.

நாமக்கல்,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தற்போதைய சங்க நிர்வாகிகளாக உள்ள பாண்டவர் அணியினரும், சுவாமி சங்கரதாஸ் அணியினரும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நடிகர் சங்க உறுப்பினர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல்லில் பாண்டவர் அணியினர் சார்பில் வாக்காளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

இதில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாஸ் எம்.எல்.ஏ., பூச்சி முருகன், கோவை சரளா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாண்டவர் அணி சங்க பொறுப்பை ஏற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

கூட்டத்திற்கு பிறகு நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் செய்ததை சொல்வதற்கு நிறைய உள்ளது. உறுப்பினர்களிடம் பேசும்போது மகிழ்ச்சியாக உள்ளனர். எங்கள் மீது ஒரு ஆழமான குற்றச்சாட்டை எதிர் தரப்பினரால் சொல்ல முடியாது. ஆனால் எந்த காரணத்திற்காக எங்களை எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது எங்களுக்கு ஒரு பாடம். தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் இணைந்தே செயல்பட விரும்புகிறோம்.

தேர்தலை நடத்த ரூ.35 லட்சம் செலவாகிறது. மேலும் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட செலவுகளை பார்த்தால் மொத்தம் ரூ.50 முதல் ரூ.60 லட்சம் லட்சம் வரை செலவாகிறது. தேர்தலை தவிர்த்து இருந்தால், சங்க கட்டிடம் கட்டுவதற்கு அது பயன்பட்டு இருக்கும். முன்கூட்டியே ஐசரி கணேஷ் கேட்டு இருந்தால், தலைவர் பதவியை விட்டு கொடுத்திருப்பேன்.

நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் தங்களது ஆதரவை வெளிப்படையாக கூற முடியாது. ஆனால் அவர்களுக்கு சங்கத்தின் முழு விவரமும் தெரிந்திருக்கிறது. இதை கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என நாங்களும் எதிர்பார்க்கவில்லை.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 நாடக நடிகர்களில் 84 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் இருந்து எங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு உறுதியாகி உள்ளது.

இந்த தேர்தலில் அரசியல் சாயம் இல்லை. எங்கள் அணியில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளனர். நடிகர் சங்க கட்டிட பணி தொய்வு அடைந்து இருப்பதாக எதிர் அணியினர் கூறுகின்றனர். ஆயிரம் சதுர அடியில் சொந்த வீடு கட்ட எவ்வளவு பாடுபடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் சதுரஅடியில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான பணத்தை ஈட்டுவதற்கும் சில காலதாமதம் வரலாம். அதையே ஒரு குற்றச்சாட்டாக சொல்லி வருகிறார்கள்.

கல்வெட்டில் பெயர் பதிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக கூறுவது சரியில்லை. இந்த கட்டிடத்திற்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதை அனைத்து நடிகர்களும் அறிவார்கள். நடிகர் விஷால் சங்க கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்கிறார்கள். ஆனால் அதனால் எந்த ஒரு சங்க நடவடிக்கையும் பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடிகர் கருணாஸ் பேட்டி அளித்தபோது, கடந்த முறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொண்டார். தற்போதைய அரசும் நடிகர் சங்க தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என நம்புகிறோம், என்றார்.

Next Story