ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை; வாலிபருக்கு வலைவீச்சு
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து பொருட்களை லாரியில் ஏற்றிச்செல்ல நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 25) மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (35) ஆகிய 2 பேரும் தனித்தனி லாரிகளில் வந்தனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிடங்கிற்கு விடுமுறை என்பதால், மறுநாள் (நேற்று) பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக கிடங்கின் அருகில் லாரியை நிறுத்தியுள்ளனர். அப்போது, பாலசுந்தரத்திற்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடன் இருந்த மற்ற டிரைவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். அன்று இரவு பாலசுந்தரம் லாரிக்கு அருகிலேயே தூங்கிவிட்டார்.
இதனையடுத்து, குடிபோதையில் வந்த கோபாலகிருஷ்ணன் அருகிலிருந்த இரும்பு கம்பியால் பாலசுந்தரத்தின் தலையில் அடித்தார். அதன் பின்னரும், ஆத்திரம் அடங்காத கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்த கல்லை எடுத்து பாலசுந்தரத்தின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி பாலசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்து கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.