‘நாடக நடிகர்கள் நலனே முக்கியம்’ சேலத்தில் கார்த்தி பேட்டி


‘நாடக நடிகர்கள் நலனே முக்கியம்’ சேலத்தில் கார்த்தி பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

நாடக நடிகர்கள் நலனே முக்கியம் என சேலத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்தார். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம், 

கடந்த 3½ ஆண்டுகால நடிகர் சங்க நிர்வாகிகளாக எங்களின் உழைப்புக்கு நாடக நடிகர்கள் மத்தியில் கிடைக்கும் அன்பே ஆறுதலாக உள்ளது. நாடக நடிகர்கள் நலனே எங்களுக்கு முக்கியம். நடிகர் சங்க கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

பண பலத்தால் ஜெயிக்க முடியும் என்றால் இளைஞர்கள் போராட முன் வரமாட்டார்கள். அதாவது பண பலம், அதிகார பலம், ஆள் பலம் உள்ளவர்களுடன் இளைஞர்கள் இருக்க போகிறார்களா? அல்லது உண்மையாக இருப்பவர்கள் உடன் இருக்கப்போகிறார்களா? என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும். இந்த தேர்தல் தொடர்பாக எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. என்னை மிரட்டும் அளவுக்கு நான் சின்னபையனும் கிடையாது.

நடிகர் சங்க தேர்தலுக்காக கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கூட தபால் ஓட்டுக்காக வேலை செய்கிறார்கள். இது ஆள் பலம் இல்லையென்றால் வேற என்ன? எனக்கு கால் சென்டரில் இருந்து வந்த காலில், சங்கரதாஸ் அணியில் இருந்து பேசுகிறோம் என கூறுகிறார். இதை தான் நான் ஆள்பலம் என கூறுகிறேன்.

ஐசரி கணேஷ் ரூ.2 கோடி கடனாகவும், ரூ.1 கோடி நன்கொடையாகவும் கொடுத்து இருக்கிறார். ரூ.6 கோடி கொடுத்தார் என்பது உண்மை கிடையாது. தற்போது ஐசரி கணேஷ் எதிர் அணியில் இருப்பதில் விருப்பம் இல்லை என என்னிடம் கூறினார்.

தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க முடியும். இதற்காக ேதர்தலில் வெற்றி தேவை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் முன்பு, தற்போது நடைபெறவுள்ள இந்த தேர்தல் அவசியமில்லாதது.

நடிகர் சங்க கட்டிடத்தின் கல்வெட்டில் பெயர் இடம் பெறுவதற்காகவே தற்போது இந்த பிரச்சினை நிலவி வருகிறது. தற்போது நடைபெறும் இந்த தேர்தலில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. மேலும் நடிகர் சங்கம் மூலம் அதிகப்படியான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது நடிகர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story