ஓட்டப்பிடாரம், யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாதம்பட்டி கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 67 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்த பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் புதிய கட்டிடம் கட்ட ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அங்கு புதிய கட்டிடம் கட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை.
இதனை கண்டித்து நேற்று காலையில் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவேல் உள்ளிட்டவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், உடனடியாக இடிக்கப்பட்ட கட்டிடம் அகற்றப்படும். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது இடிக்கப்பட்ட கட்டிடம் அப்புறப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story