குஞ்சப்பனை சுற்றுவட்டாரத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியது - காட்டுயானைகள் படையெடுப்பு


குஞ்சப்பனை சுற்றுவட்டாரத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியது - காட்டுயானைகள் படையெடுப்பு
x
தினத்தந்தி 18 Jun 2019 4:15 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு காட்டுயானைகள் படையெடுக்கின்றன.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள மாமரம், கீழ் தட்டப்பள்ளம், கோழிக்கரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு, அரையூர், கரிக்கையூர், செம்மனாரை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பலா மரங்களை வளர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் இங்குள்ள பலா மரங்கள் காய்க்க தொடங்கும். இங்கு விளையும் சுவை மிகுந்த பலாப்பழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. மரங்களில் கொத்து, கொத்தாக பலாப்பழங்கள் பழுத்து தொங்குகின்றன. இந்த பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் படையெடுத்து வருகின்றன.

இந்த காட்டுயானைகள் அடிக்கடி கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-

தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பலாப்பழங்களை தின்பதற்காக காட்டுயானைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. அவை அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன. எனவே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

சாலையில் காட்டுயானைகளை கண்டால், வாகனங்களில் இருந்து ஒலி எழுப்புவதை தவிர்க்க வேண்டும். காட்டுயானைகளுடன் புகைப்படம் எடுக்கவோ அல்லது வேறு வகையில் அவைகளுக்கு தொல்லை கொடுக்கவோ முயல கூடாது. மேலும் பலாப்பழ மரங்களை வளர்த்து வரும் விவசாயிகள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வரக்கூடாது. கூலி வேலைக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். பலாப்பழ தோல் உள்ளிட்டவற்றை வீதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் போடுவதையும், சாலையோரத்தில் வீசுவதையும் தவிர்க்க வேண்டும். அவற்றை மொத்தமாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். இதன் மூலம் பலாப்பழ வாசனையை தொடர்ந்து காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

குஞ்சப்பனை விவசாயிகள் கூறும்போது, தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மொத்தமாக பலாப்பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அரவேனு, கொட்டகம்பை, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பலாப்பழங்களை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.500 வரை எடைக்கு தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறது. பலாச்சுளை ஒன்று ரூ.3 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது என்று கூறினார்.

Next Story