கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி திடீர் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி திடீர் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:45 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி திடீரென்று இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த கோவைப்புதூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 47) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (42). இவர்களுடைய மகள் சத்யபிரியா (20). இவர் கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மாதவிடாய் பிரச்சினை காரணமாக சத்யபிரியா கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள மனோன்மணியம் சித்தமருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவர் குருநாதனிடம் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது. அவர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டு வந்தார்.

ஆனாலும் அவருடைய உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் அவர் அந்த மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது, மேலும் சில மருந்துகளை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சில மருந்துகளை டாக்டர் குருநாதன் கொடுத்து உள்ளார்.

அதை சாப்பிட்ட பின்னரும், சத்யபிரியாவின் உடல்நிலை சரியாகவில்லை. மாறாக அவருடைய கை, கால்கள், முகம் உள்பட பல்வேறு இடங்களில் வீக்கம் ஏற்பட்டு உடல் நிலை மிகவும் மோசமானது.

இதையடுத்து கணேசன், தனது மகளை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது 2 சிறுநீரகங்கள் செயலிழந்ததும், நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து சத்யபிரியாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி திடீரென சத்யபிரியா நேற்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த சத்யபிரியாவின் உறவினர்கள் நேற்று காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் சத்யபிரியாவின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, சித்த மருத்துவர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டதால் தான் சத்யபிரியாவின் உடல்நிலை மோசமாகி் அவர் இறந்துவிட்டார். எனவே சித்த மருத்துவர் குருநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான், சத்யபிரியா சாவுக்கான முழு காரணம் தெரியவரும். எனவே அந்த அறிக்கை கிடைத்ததும், சித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறும்போது வழங்கப்படும் மருந்து-மாத்திரைகளின் தன்மை, அவற்றை பயன்படுத்தும் காலம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப் பட்டு இருக்கும். ஆனால் மற்ற மருத்துவ முறையில் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளில் அப்படி இருக்காது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சத்யபிரியா அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய உடல் முழுவதும் புண் ஏற்பட்டு பாதிப்பு அதிகமானதால் ரத்தத்தில் கலந்து விட்டது. இதன் காரணமாக சிறுநீரகங்கள் உள்பட பல்வேறு உள்உறுப்புகள் பாதிக்கப் பட்டதால்தான் அவர் உயிரிழந்து உள்ளார். அவருக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்கப் பட்டது என்பதை அறிந்த பின்னர்தான் அவருடைய சாவுக்கான காரணம் தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story