திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் திருட்டு - வடமாநில கொள்ளையன் கோர்ட்டில் ஆஜர்


திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் திருட்டு - வடமாநில கொள்ளையன் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 18 Jun 2019 3:45 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் திருடிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கைதான வடமாநில கொள்ளையனை, ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல், மதுரையில் இருந்து ரெயில்கள் மூலம் வடமாநிலங்களுக்கு ஏலக்காய் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து வடமாநிலத்துக்கு செல்லும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ரெயில் திண்டுக்கல்-கரூர் இடையே சென்ற போது ரூ.2¾ லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் மாயமாகின.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 9 பேர், ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 8 பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், வாரணாசியை அடுத்த முகல்ஸ்ராய் பகுதியை சேர்ந்த பப்பு என்ற முகமது ஆசிப் (வயது 40) மட்டும் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

இதற்கிடையே முகமது ஆசிப் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வாரணாசிக்கு விரைந்தனர். அதற்குள் மற்றொரு திருட்டு வழக்கில் முகமதுஆசிப், வாரணாசி போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து அங்குள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏலக் காய் கொள்ளை வழக்கில் அவரை, திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவரை நேற்று திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். பின்னர் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், முகமதுஆசிப்பை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் உத்தரவிட்டார். அதன்படி அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story