‘நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு’ - நடிகர்கள் நாசர், விஷால் பேட்டி


‘நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு’ - நடிகர்கள் நாசர், விஷால் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

‘நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும்‘ எனறு திண்டுக்கல்லில் நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர் கூறினர்.

திண்டுக்கல்,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் நடிகர்கள் நாசர், விஷால், கருணாஸ் உள்ளிட்டோரை கொண்ட பாண்டவர் அணியும், பாக்கியராஜ் உள்ளிட்ட நடிகர்களை கொண்ட சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இந்த 2 அணியினரும், மாநிலம் முழுவதும் சென்று நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதன்படி பாண்டவர் அணியினர் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக, மாவட்டந்தோறும் நாடக நடிகர்களை சந்தித்து வருகிறோம். நாங்கள் சொன்னதை விட அதிகமாகவே 3½ ஆண்டுகளில் செய்து இருக்கிறோம். நாங்கள் பொறுப்புக்கு வரும் போது ரூ.85 லட்சம் மட்டுமே வைப்புநிதியாக இருந்தது. ஆனால், ரூ.30 கோடி மதிப்பிலான கட்டிடத்தை கட்டி இருக்கிறோம். மேலும் நடிகர்களுக்கு ரூ.1¾ கோடி ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.

நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை தவிர, அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம். அது, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி ஆகும். அதுவும் 5 மாதங்களில் நிறைவுபெற்று விடும். அதற்காகவே பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இந்த தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதில் நாங்கள் முழு கவனம் செலுத்தினோம். மீண்டும் நாங்கள் பதவி ஏற்ற பின்னர், நாடக நடிகர்களை சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம். நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர்ந்து சினிமா வாய்ப்பு வழங்கப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சரிசெய்வோம்.

நேற்று வரை எங்களுடன் ஓரே தட்டில் சாப்பிட்டவர்களுக்கு, இன்று புதிய கருத்து தோன்றி இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அவர் களை, நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை. அனைத்து கட்சியினரும் நடிகர்களாக இருக்கிறார்கள். எனவே, ஒரு அரசியல் கட்சி சார்பில் சங்கம் செயல்பட முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது நடிகர்கள் ராஜேஷ், பூச்சி முருகன், கருணாஸ், ரமணா, நந்தா, நடிகை கோவை சரளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story