சிறுபாக்கம், செல்லியம்மன் கோவிலில் கலசம் திருட்டு - கும்பாபிஷேகம் முடிந்த 3-வது நாளில் மர்மநபர்கள் கைவரிசை
சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த 3-வது நாளில் கோபுர கலசத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் கிராமத்தின் எல்லையில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 14-ந் தேதி காலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு கோவில் நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், கோபுரத்தில் வைத்திருந்த கலசத்தை வெட்டி திருடிச்சென்றனர். மேலும் கோவில் வளாகத்தில் வைத்திருந்த இரும்பினால் ஆன உண்டியலையும் தூக்கிச் சென்றனர்.
இதனிடையே நேற்று காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் கலசம் மற்றும் உண்டியல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது பற்றி கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது கோவிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உண்டியல் கிடந்தது. அதனை முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அப்போதுதான் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோபுர கலசத்தை திருடிச்சென்றதும், உண்டியலை தூக்கிச்சென்றதும், அதில் காணிக்கை பணம் எதுவும் இல்லாததால் பாதியிலேயே வீசிச்சென்றதும் தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேகம் முடிந்த 3-வது நாளில் மர்ம நபர்கள் கோபுர கலசத்தை திருடிச்சென்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story