விக்கிரவாண்டி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


விக்கிரவாண்டி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2019 10:15 PM GMT (Updated: 17 Jun 2019 10:19 PM GMT)

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் மினி குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் வறண்டதால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளுக்கும், மினி குடிநீர் தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொது மக்கள் குடிநீர் கேட்டு கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் மினிகுடிநீர் தொட்டிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொது மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. குடி நீருக்காக அவர்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள ஊர்களுக்கு அலைந்து திரிந்து வந்தனர்.

இது குறித்து புகார் தெரிவித்த பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவமுருகன், ஆறுமுகம், ஹேமலதா, அமுதலட்சுமி, ஊராட்சி செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து வருகிற 21-ந்தேதி முதல் போதுமான அளவுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொது மக்களை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story