விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது


விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 5:30 AM IST (Updated: 18 Jun 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

மதுவிருந்துக்கு அழைத்து மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 36). இவரது மனைவி முத்துலட்சுமி. இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இவர்களுடன் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரும் வேலை பார்த்துள்ளார்.

அப்போது முத்துலட்சுமிக்கும் காளிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கருப்பண்ணன் பலமுறை தனது மனைவியையும் காளிமுத்துவையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதல் ஜோடி இதனை பொருட்படுத்தவில்லை என தெரிகிறது. இதனால் காளிமுத்துவை தீர்த்துக்கட்ட கருப்பண்ணன் முடிவு செய்தார்.

காளிமுத்துவுக்கு போன் செய்து வீட்டில் மது விருந்து கொடுப்பதாக கூறி அழைத்துள்ளார். இதனை நம்பிய காளிமுத்துவும் கல்லுப்பட்டி கிராமத்திற்கு வந்து உள்ளார். அங்கு வந்த காளிமுத்துவும் கருப்பண்ணனும் மது அருந்தி விட்டு கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கருப்பண்ணன் மண்வெட்டியை எடுத்து காளிமுத்துவை வெட்டியுள்ளார்.

இதை அங்கிருந்த முத்துலட்சுமி தடுத்துள்ளார். அவரையும் மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த நிலையில் முத்துலட்சுமி பயந்துபோய் பக்கத்து வீட்டில் போய் ஒளிந்து கொண்டார். உயிர் தப்ப அங்கிருந்து காளிமுத்து ஓட முயற்சித்துள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த அவரால் ஓட இயலவில்லை.

அந்த சமயத்தில் வீட்டின் அருகே கிடந்த கல்லை தூக்கி காளிமுத்துவின் தலையில் கருப்பண்ணன் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

இந்த கொடூர சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வரும் கருப்பண்ணனை பிடிக்க அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், காரியாபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கருப்பண்ணனை கைது செய்தனர்.


Next Story