மதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு


மதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு
x
தினத்தந்தி 17 Jun 2019 11:45 PM GMT (Updated: 17 Jun 2019 11:21 PM GMT)

போலீசார் லத்தியை தூக்கி எறிந்ததில் வாலிபர் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை,

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (வயது35). அவருடைய மனைவி கஜப்பிரியா.

விவேகானந்தகுமார், மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் கடை வைத்திருந்தார். இவர் இரவு 11.15 மணிக்கு, தனது கடையை அடைத்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர், சரவணக்குமாரும் உடன் சென்றார். இவர்கள் சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இவர்களது வாகனத்தை போலீசார் நிறுத்த சொன்னதாகவும், ஆனால் அதனை பொருட்படுத்தாமல் விவேகானந்தகுமார், தனது வாகனத்தை இயக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

அப்போது சாலையின் மறுபுறத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு போலீசார், இவர்களை நோக்கி லத்தியை வீசியதாகவும், அதனால் நிலைதடுமாறிய அவர்கள் அருகில் பாலத்தில் இருந்த தடுப்பு மீது மோதி கீழே விழுந்துள்ளனர். அதில் விவேகனாந்தகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. சரவணக்குமார் மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் மீட்கப்பட்டு, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவேகானந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். சரவணக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இறந்த விவேகனாந்தகுமாரின் மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று அங்கு போராட்டமும் நடத்தினர். அப்போது ’நீதி வேண்டும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலக வளாக கதவுகள் மூடப்பட்டன. பின்னர் போலீசார் அவர்களிடம் இங்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘விவேகானந்தகுமார் மீது போலீசார் லத்தியை தூக்கி வீசியதால் தான் மரணம் அடைந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது, ‘‘போலீசார் லத்தியை வைத்து தாக்க வில்லை. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவர்களது வாகனத்தை நிறுத்தும்படி கூறினர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். அந்த அடிப்படையில் இது விபத்து என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது. பசுமலை பைகாரா போலீஸ் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அப்போது அங்கு முன்னே நின்று இருந்த போலீசார் ஒருவர் தான் கையில் வைத்திருந்த லத்தியை அந்த மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் சொருகினார். அதில் வாகனம் நிலைதடுமாறியது. அப்போது வாகனத்தில் இருந்தவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சியில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை, போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story