நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்க வேண்டும் சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்க வேண்டும் சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2019 5:30 AM IST (Updated: 18 Jun 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்கவேண்டும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் நீர்நிலைகள் வறண்டுள்ளது. புதுச்சேரியின் நீராதாரமாக விளங்கும் ஊசுடு ஏரி 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி அடைந்துள்ளது. இதற்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வாய்க்கால்களை தூர்வாருவதில் அரசு ஆர்வம் காட்டாததே காரணமாகும். கடந்த 50 ஆண்டுகளில் 90 சதவீத குளங்கள், குட்டைகள், ஏரிகள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக 80 சதவீத மழைநீர் கடலில் கலந்து வருகிறது. கடல்நீரை நல்ல நீராக மாற்றி உபயோகிக்கும் இரசாயன தொழிற்சாலை கக்கு மட்டுமே பிற மாநிலங்கள் அம்மாநிலத்தின் கடலோர பகுதிகளில் அனுமதி அளித்துள்ள நிலையில் அரசின் அலட்சியப்போக்கினால் பல மாநிலங்களில் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரானது நீர்நிலைகளில் கலப்பதையும் தவிர்க்கவேண்டும். பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாத போர்கள் போடப்பட்டு குடிநீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல்நீர் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலை நீடித்தால் புதுச்சேரியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து விடும்.

இந்தநிலையை தவிர்க்க வரும் மழைக்காலத்திற்கு முன்பே அரசு கட்டிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். அரசு கட்டிடங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பழுதடைந்துள்ளது. அவற்றை எல்லாம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பிற மாநிலங்களில் உணவகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நீரானது சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையை புதுச்சேரியிலும் செயல்படுத்த வேண்டும். ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுபோல் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், நீர்நிலைகளை சென்றடையும் சிறு வாய்க்கால்களை தூர்வாருதலும், தடுப்பணைகள் அமைப்பதும் அரசின் கடமையாகும்.

மழைநீருக்கு ஆதாரமாக விளங்கும் மரக்கன்றுகளை வனத்துறை, பள்ளி, கல்லூரிகள் மூலமாக புதுச்சேரியின் அனைத்து இடங்களிலும் ஒரு லட்சத்துக்கும் மேலாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் கனகன் போன்ற ஏரிகளில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு அங்கு மீன்கள் இறந்துள்ளன. எனவே இதுபோன்ற நீர் ஆதார ஏரிகளை கண்காணிக்க 24 மணிநேரமும் காவலர்களை நியமிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Related Tags :
Next Story