விளாத்திகுளத்தில் ஜமாபந்தி: 36 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


விளாத்திகுளத்தில் ஜமாபந்தி: 36 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 18 Jun 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் 36 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் 36 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

ஜமாபந்தி

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டார். அவர் பல்லாகுளம், இ.வேலாயுதபுரம், கிழக்கு கல்லூரணி, கே.தங்கம்மாள்புரம், குளத்தூர், தெற்கு வைப்பார், வடக்கு பூசனூர் ஆகிய கிராமங்களின் ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 236 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா உட்பிரிவு 20 மனுக்களும், பட்டா கேட்டு 69 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கேட்டு 107 மனுக்களும் உள்பட இதர மனுக்களும் பெறப்பட்டன.

இதற்கு முன்னதாக ஏற்கனவே ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து 36 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 55 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 10 பேருக்கு குடும்ப அட்டைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது. நேற்று பூசாரிப்பட்டி, லிங்கம்பட்டி, கிளவிப்பட்டி, திட்டங்குளம், துறையூர், பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை மொத்தம் 858 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 115 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 124 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 619 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தாசில்தார் பரமசிவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் ராமகிரு‌‌ஷ்ணன், துணை தாசில்தார் சுரே‌‌ஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிந்து தலைமையில் ஜமாபந்தி நடந்தது. மொத்தம் 702 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 197 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 505 மனுக்கள் பரீசிலனையில் உள்ளது. 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 57 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 38 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தாசில்தார் தில்லைப்பாண்டி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார் கோபால், தலைமையிடத்து துணை தாசில்தார் பூபதி, தேர்தல் துணை தாசில்தார் கைலாச குமாரசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வேடநத்தம் குருவட்டத்தைச் சேர்ந்த வேடநத்தம், தெற்கு கல்மேடு, மேலஅரசடி, கீழஅரசடி, வேப்பலோடை, பட்டினமருதூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. அப்போது, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா கோரி மொத்தம் 290 பேர் மனு கொடுத்தனர். இதில் 11 பயனாளிகளுக்கு தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் மலர்தேவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகாமிசுந்தரி, மண்டல் துணை தாசில்தார்கள் சுப்புலட்சுமி, கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராதாமகேசுவரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story