பாவூர்சத்திரத்தில் காய்கறி வியாபாரி மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
பாவூர்சத்திரத்தில் காய்கறி வியாபாரி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரத்தில் காய்கறி வியாபாரி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காய்கறி வியாபாரி
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திருமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60) காய்கறி வியாபாரி. இவர் காய்கறிகளை மொத்தமாக வாங்கி, தனது மொபட்டின் மூலம் ஊர் ஊராக ெசன்று விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2 மகள்கள், மகனுக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கணேசன் வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து காய்கறி வியாபாரத்துக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் கணேசனை அவருடைய குடும்பத்தினர் தேடி வந்தனர்.
மர்ம சாவு
இந்த நிலையில் நேற்று காலையில் பாவூர்சத்திரம்-கடையம் மெயின் ரோடு தனியார் மர அறுவை ஆலை அருகில் உள்ள வணிக வளாகத்தின் முன்பாக கணேசன் தலைகுப்புற விழுந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்தது. அங்கு அவரது மொபட்டும் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கணேசனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கணேசன் உடல்நலக்குறைவால் மயங்கி கீழே விழுந்தபோது, அங்கு கிடந்த கல்லில் விழுந்ததால், அவரது கழுத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டதா?, அல்லது அவரை யாரேனும் கழுத்தை அறுத்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாவூர்சத்திரத்தில் காய்கறி வியாபாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story