தமிழகம்-புதுச்சேரியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 9-ந் தேதி ஊர்வலம்: காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம்


தமிழகம்-புதுச்சேரியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 9-ந் தேதி ஊர்வலம்: காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம்-புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 9-ந் தேதி ஊர்வலம் நடத்துவது என காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரிப்படுகையை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் காவிரிப்படுகையை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல் படுகின்றன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பதற்கு பன்னாட்டு நிறுனங்களுக்கும், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 1 கோடிக்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

உணவு உற்பத்தியில் சரிவு ஏற்படும். நிலத்தடி நிர் மாசுபட்டு, குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் சூழ்நிலை உருவாகும். காவிரிப்படுகை மக்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என்ற நிலையில் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளதை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

காவிரிப்படுகையில் மீத்தேன் உள்ளிட்ட ரசாயன பொருட்களை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. எனவே ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவைகளை எடுக்க விடப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த திட்டங்களுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம்(ஜூலை) 9-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கக்கூடிய ஊர்வலம் நடக்கிறது. ஒருவார காலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை உண்டாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர்கள் குணசேகரன், சுப்பிரமணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக் கரசு, பேரழிவிற்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story