அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு; வேடசந்தூர் அருகே பரபரப்பு
வேடசந்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாத்தினிபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர், கடந்த 14–ந்தேதி வேடசந்தூரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை அரிவாளால் வெட்டியதாக அருப்பம்பட்டியை சேர்ந்த செந்தில், முருகன், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். இதற்கிடையில் இரவில் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிலர், கார்த்திக் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினர்.
ஆனால் வீட்டின் கதவு முன்பு விழுந்து தீப்பிடிக்காமல் பாட்டில் உடைந்து சிதறியது. இதனால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பாட்டில் உடையும் சத்தம் கேட்டு கார்த்திக்கின் குடும்பத்தினர் எழுந்து வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நேற்று காலை வேடசந்தூர் போலீசாருக்கு கார்த்திக்கின் குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.