மீனவர்களுக்கு மன்னார் வளைகுடா வாழ்வாதாரமாக விளங்குகிறது; கலெக்டர் வீரராகவராவ் பேச்சு


மீனவர்களுக்கு மன்னார் வளைகுடா வாழ்வாதாரமாக விளங்குகிறது; கலெக்டர் வீரராகவராவ் பேச்சு
x
தினத்தந்தி 19 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதுமடம் கிராமத்தில் நடைபெற்ற கடல்சார் வன உயிரின பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கலந்துகொண்டு மன்னார் வளைகுடா மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் புதுமடம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடல்சார் ஆய்வுத்துறை கட்டிடத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மீன் மரபணு வள செயலகம் சார்பில் கடல்சார் வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கின் நிறைவுவிழா நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார்.

ஆராய்ச்சியாளர் டாக்டர் அஜித்குமார் வரவேற்று பேசினார். முகாமை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேசிய மீன் வள மரபணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் குல்திப்லால், தேசிய பல்லுயிர் ஆணைய முன்னாள் இயக்குனர் மீனாகுமாரி, மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலையே முக்கிய தொழிலாக கொண்டு உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 94,000 டன் அளவிலும், 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் டன் அளவிலும் மீன்பிடி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழக மீன்பிடியில் 20 சதவீத அளவாகும்.

அந்த வகையில் மீனவர்களுக்கு மன்னார் வளைகுடா பகுதி முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதி ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை 225 மீனவ கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட கடல்சார் வன உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய கடல்சார் வன உயிரினங்கள் பாதிக்கப்படுவது பருவநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.

அந்த வகையில் சிறப்பு வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியை பாதுகாத்திடும் வகையில் அதில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது இன்றியமையாததாகும். இயற்கை சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் பெரும்பாலான வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடற்கரை மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஆகியோருக்கு மீன்பிடி தொழிலோடு கூடுதலாக வருமானம் ஈட்ட ஏதுவாக மீன்பிடித் தொழில் சார்ந்த இதர தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடல் பாசி வளர்த்தல், வண்ண மீன் குஞ்சு வளர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் உதவி திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி அளவிலும், மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.230 கோடி அளவிலும்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் மீனவ கிராமங்களை சேர்ந்த பயனாளிகள் அதிகஅளவில் உள்ளனர். அரசு செயல்படுத்தும் இத்தகைய கடன் உதவி திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமானது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடையாகும். அதை முழுமையாக பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடத்தில் பாதுகாப்பாக ஒப்படைப்பது நம் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பு மைய இயக்குனர் சுதாகர், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலகிருஷ்ணன், கடலியல் ஆய்வக உதவி பேராசிரியர் ஆனந்த், ராமகிருஷ்ணன், புதுமடம் முன்னாள் ஊராட்சி தலைவர் தர்வேஸ் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவ கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story