தீண்டாமை கடைபிடிக்காத கிராம பஞ்சாயத்துக்கு ரூ.10 லட்சம் பரிசு கலெக்டர் ஷில்பா வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராம பஞ்சாயத்துக்கு ரூ.10 லட்சம் பரிசை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராம பஞ்சாயத்துக்கு ரூ.10 லட்சம் பரிசை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
கிராம பஞ்சாயத்து
நெல்லை மாவட்டம, குருவிக்குளம் யூனியன் செட்டிக்குளம் கிராமத்தை உள்ளடக்கிய உசிலங்குளம் கிராம பஞ்சாயத்து தீண்டாமை கடைபிடிக்காத பஞ்சாயத்தாக 2018-19-ம் ஆண்டிற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பரிசு தொகை ரூ.10 லட்சத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலெக்டர் ஷில்பா வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
இந்த கிராமத்தில் அனைவருக்கும் பொதுமயானம், உசிலங்குளம் மற்றும் செட்டிகுளம் கிராமங்களில் தலா ஒரு மயானம் உள்ளது. இந்த மயானங்களை அந்தந்த கிராம மக்கள் பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் பொதுக்கிணறுகளில் அனைத்து சமுதாயத்தினரும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
திருவிழாக்களில்
டீக்கடைகளில் அனைத்து இனமக்களும் சமத்துவமாக அமர்ந்து டீக்குடிக்கிறார்கள். கோவில்களில் நடைபெறும் விழாக்களில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். திருவிழாக்களில் சமத்துவமாக உணவு உட்கொள்கின்றனர். இதர இனமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களுக்கு ஆதிதிராவிடர் மக்களை அழைக்கின்றனர். அதே போன்று ஆதிதிராவிடர் மக்கள் இல்ல விழாக்களில் இதர இனமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பஞ்சாயத்தில் தீண்டாமை மற்றும் மதசார்புடைய வழக்குகள் ஏதும் காவல் துறை ஆவணங்களில் இல்லை என்ற விபரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த பஞ்சாயத்தை 2018-19-ம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத பஞ்சாயத்தாக தேர்வு செய்து அதற்கான பரிசுத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் பரிசுத் தொகையினை பெற வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story