பேரிகார்டுகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு
பேரிகார்டுகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ராஜீவ்காந்தி சிக்னலில் இருந்து கருவடிக்குப்பம் வரை தற்போது புதிதாக 5 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உழவர்கரை தாலுகா அலுவலகம் அருகே ஒரு சிக்னல் உள்ளது. லாஸ்பேட்டையில் இருந்து வேலன்நகர், கவிக்குயில் நகர், சாரம் பகுதிக்கு செல்வோர் இந்த சிக்னல் வழியாக வந்து கிழக்கு கடற்கரை சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் குறுக்கே செல்ல முடியாத அளவுக்கு பேரிகார்டுகளை வைத்தனர். இதனால் லாஸ்பேட்டையில் இருந்து வேலன்நகருக்கு வருபவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கிருஷ்ணாநகர் சிக்னலில் திரும்பி வந்தனர். இதே போல் வேலன் நகரில் இருந்து லாஸ்பேட்டை செல்பவர்கள் கொக்குபார்க் சிக்னல் சென்று திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பேரிகார்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். முன்பு இருந்ததுபோல் போக்குவரத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரிசோதனை அடிப்படையில் தான் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய போலீசார், அதனை அகற்றினர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டனர்.
இந்த மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.