மராட்டிய அரசுக்கு ரூ.4.14 லட்சம் கோடி கடன் விதவை பெண்களுக்கு புதிய பென்சன் திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு
மராட்டிய அரசின் கூடுதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விதவைப்பெண்களுக்கு புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசின் கூடுதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விதவைப்பெண்களுக்கு புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு ரூ.4.14 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் பட்ஜெட்
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி காலம் வரும் அக்டோபர் மாதம் முடிகிறது. எனவே அடுத்த 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு மராட்டிய மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டது. இதில் 13 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இந்தநிலையில் மராட்டிய குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நேற்று 2019-20-ம் ஆண்டுக்கான மாநில அரசின் கூடுதல் பட்ஜெட்டை நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தாக்கல் செய்தார்.
பற்றாக்குறை
ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 933 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 640 கோடி என கூறப்பட்டுள்ளது.
எனவே இது ரூ. 20 ஆயிரத்து 293 கோடி பற்றாக்குறை பட்ஜெட் ஆகும். தேர்தல் காலம் என்பதால் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகப்படியான கவர்ச்சி திட்டங்கள் இல்லாவிட்டாலும், கூடுதல் பட்ஜெட்டில் கிராமப்புற மக்களை கவரும் வகையில் வேளாண்மை மற்றும் வறட்சி நிவாரணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக நீர்மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 597 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகழகம் அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.
விதவைகளுக்கு பென்சன்
மும்பை ஜே.ஜே. கலை மற்றும் கட்டுமான கல்லூரிக்கு ரூ.150 கோடியும், மும்பையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் தங்கர் சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கான கழகங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விதவை பெண்களுக்கு புதிய பென்சன் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி ஒரு குழந்தையுடன் வசித்து வரும் விதவை பெண்களுக்கு ரூ.1100-ம், 2 குழந்தைகளுடன் வசித்து வரும் விதவைகளுக்கு ரூ.1200-ம் மாதந்தோறும் பென்சன் வழங்கப்பட உள்ளது.
சயான் - பன்வெல் பாலம்
சயான் - பன்வெல் இடையே பாலம் கட்ட ரூ.775 கோடியும், அரசு பஸ் நிலையங்கள் கட்ட ரூ.136 கோடியும், விவசாயிகள் விபத்து காப்பீடு திட்டத்துக்காக ரூ.210 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுய உதவி குழு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.
இதேபோல சுகாதார திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரத்து 581 கோடியும், மற்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடன்
கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி மாநில அரசின் கடன் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 411 கோடி என கூறிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story