புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி; தனி வார்டில் தீவிர சிகிச்சை


புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி; தனி வார்டில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 19 Jun 2019 5:00 AM IST (Updated: 19 Jun 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் ஜிப்மரில் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இது அருகில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் தீராத காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக கோரிமேடு அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 52) என்பவர் கேரளாவில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே சொந்த ஊருக்கு திரும்பினார்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த 10-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை ‘நிபா வைரஸ்’ தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவே அவரது ரத்த மாதிரிகளை ஜிப்மர் டாக்டர்கள் புனேவில் உள்ள நச்சு நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.

ஆய்வில் அவர் நிபா வைரசால் தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் கடந்த 16-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா செட்டிகட்டளை பெரிய தெருவை சேர்ந்த ராமலிங்கம் (வயது 75) என்பவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரை கடந்த 10-ந்தேதி பாம்பு கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக திருவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன்பின் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் கடும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டுள்ளார். அவர் காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

அதன்பின் நேற்று முன் தினம் இரவு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ‘நிபா வைரஸ்’ தாக்குதல் அறிகுறிகள் இருப்பதால் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள நச்சு நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவர் நிபா வைரசால் தாக்கப்பட்டரா? என்பது குறித்த விவரம் தெரிய வரும்.

Next Story