கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்


கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
x
தினத்தந்தி 19 Jun 2019 3:41 AM IST (Updated: 19 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுராந்தகம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீரல்வாடியை சேர்ந்தவர் வெங்கடரெட்டியார். இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 43 சென்ட் நிலத்தை அரசு உயர்மட்ட கால்வாய் அமைப்பதற்காக அவரிடம் இருந்து கடந்த 1989-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதற்கு 1991-ம் ஆண்டு ரூ.58 ஆயிரம் கொடுக்கப்பட்டது. பின்னர் வெங்கடரெட்டியார் இறந்து போக அவரது வாரிசுகளான அவரது மனைவி காமாட்சி, மகன் சந்திரசேகர், மகள் பிரமிளா ஆகியோர் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்த பணம் போதாது என 1992-ம் ஆண்டு அவரது வாரிசுகள் மதுராந்தகம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை வக்கீல் ராஜேந்திரன் வாதாடி வந்த நிலையில் 2001-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு அதில் ரூ.59 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. இருப்பினும் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்த மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதி வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 913 வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

இதனை செலுத்த தவறியதால் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை , நாற்காலி, மின்விசிறி , ஜீப் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காலை முதுகலை கட்டளை நிறைவேற்றுபவர் வனிதா மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் தாலுகா அலுவலகத்திற்குள் நுழைந்து ஜப்தி முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தார் அங்கு வந்து மீதமுள்ள பணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story