வாடகை கார் மீது மற்றொரு கார் மோதல் தொழில் அதிபர் பரிதாப சாவு குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வாலிபர் கைது
குடிபோதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி வாடகை காரில் சென்ற தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
குடிபோதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி வாடகை காரில் சென்ற தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழில் அதிபர்
மும்பை அந்தேரி போர் பங்களா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சைலேஷ்குமார்(வயது33). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு காந்திவிலியில் இருந்து அந்தேரிக்கு வாடகை காரில் வந்து கொண்டு இருந்தார். கிழக்கு விரைவு சாலையில் கோரேகாவ் கிழக்கு விர்வானி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு கார், வாடகை கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வாடகை காரில் இருந்த தொழில் அதிபர் சைலேஷ்குமார் மற்றும் டிரைவர் ரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
போதை வாலிபர் கைது
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஜோகேஸ்வரி மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தொழில் அதிபர் சைலேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் ரமணி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
முன்னதாக போலீசார் வாடகை கார் மீது மோதிய காரை ஓட்டி வந்த ஆரேகாலனியை சேர்ந்த சுதான்சு சாபு(19) என்ற வாலிபரை பிடித்தனர். மருத்துவ சோதனையில் அவர் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுதான்சு சாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story