கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் - சுப.உதயகுமார் பங்கேற்பு


கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் - சுப.உதயகுமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுப.உதயகுமார் கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மீத்தேன் திட்டம், எட்டு வழிச்சாலை திட்டம், கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவற்றை கொண்டுவரும் மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து குமரிமாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் காஜாமைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகபர் அலி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாகீன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அழிவுத் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி, பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் ஆகியோர் பேசினர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

முன்னதாக சுப.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கூடங்குளத்தை தற்போது அணுக்கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். அணு கழிவுகளை 7 ஆண்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்பின்னர் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அடுத்த 7 ஆண்டுகள் கழித்து ஆழ்நிலை கருவூலத்தில் இதனை சேகரிக்க வேண்டும். இப்படி ஆபத்தான சூழல் உள்ளது.

இந்தநிலையில் அணுக் கழிவுகளை அகற்ற, சேகரிக்க புதிய திட்டத்தை ரூ.539 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். 29 மாதங்களில் இதனை முடிக்க உள்ளனர். அணுக்கழிவு சேகரிப்பு என்பது மிகவும் ஆபத்தானது. கூடங்குளம் போராட்டம் நடந்தபோது தற்போதைய பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினேன். அப்போது அவர் ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்த திட்டத்தை ஏற்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றார். இதுதான் பா.ஜனதாவின் நிலைப்பாடு.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்ட டெல்லியில் இருந்து மருத்துவக்குழுவினர் வந்து ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த கட்டிடத்தை கட்டுகின்றனர். இதுபோல் நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியிலும் கட்ட உள்ளனர்.

கூடங்குளம் நம்மை அழிக்க கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். நான் வாழ்ந்து விட்டேன். எனது எஞ்சியுள்ள வாழ்நாளை சிறையில் கழிக்கக்கூட தயாராக உள்ளேன். ஏற்கனவே குமரி மாவட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இனி கதிர்வீச்சாலும் பாதிக்கப்படுவதை ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story