குளித்தலை அருகே, ராட்சத குழாயில் உடைப்பு - பீறிட்டு எழுந்த தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது
குளித்தலை அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பீறிட்டு எழுந்த தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
குளித்தலை,
கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில், மதுரை மாவட்டம் மேலூர் மக்களின் குடிநீர் தேவைக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் குளித்தலை-மணப்பாறை சாலையில் இறும்பூதிபட்டி அருகே நேற்று ராட்சத குழாய் ஒன்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் பீறிட்டு எழுந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதை அந்த வழியாக சென்ற சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இதுதொடர்பாக குளித்தலை கோட்டாட்சியர் லியாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை நீண்ட நேரம் போராடி அடைத்தனர். தமிழகத்தில் வறட்சியால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெருமளவு குடிநீர் வீணானது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story