வானவில் : இந்தியாவில் அறிமுகமாகிறது அதிநவீன பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிள்


வானவில் : இந்தியாவில் அறிமுகமாகிறது அதிநவீன பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 19 Jun 2019 6:54 PM IST (Updated: 19 Jun 2019 6:54 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்கள் இப்போது பெருமளவு ஊக்குவிக்கப்படுகின்றன.

பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபெட்டுகள் வந்துள்ள நிலையில் முதல் முறையாக இந்திய சந்தையில் கலக்க வருகிறது. ரிவோல்ட். பேட்டரியில் ஓடக் கூடிய இந்த மோட்டார் சைக்கிள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

செயற்கை தொழில்நுட்பம் எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில், எல்.டி.இ. இணைப்புடன் வரும் முதலாவது மோட்டார் சைக்கிள் இதுவே. இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா, இந்த மோட்டார் சைக்கிளை  அறிமுகப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார். இதன் மூலம் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சூழலுக்கு பாதிப்பில்லாத மோட்டார் சைக்கிள் உற்பத்தியிலும் இறங்குகிறது.

சுமார் 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பயனாக பேட்டரி மோட்டார் சைக்கிள் தயாராகிஉள்ளதாக சர்மா தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இருந்தாலும், வாகன வடிவமைப்பில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் மிகச் சிறப்பான வாகனத்தை உருவாக்கியுள்ளனர். வழக்கமாக பெட்ரோலில் செயல்படும் வாகனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இதன்செயல் திறன் இருக்கும் என்று சர்மா தெரிவித்துள்ளார். முற்றிலும் பேட்டரியில் ஓடக்கூடிய இந்த மோட்டார் சைக்கிள், செயற்கை தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இதில் 4 ஜி எல்.டி.இ. சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. எளிதில் கழற்றி மாற்றும் வகையில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி மோட்டார் சைக்கிளில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்ல முடிவது சிறப்பு.

மேலும் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் இதில் 150 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மனேசர் ஆலையில் உற்பத்தி பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்நிறுவன ஆலை ஆண்டுக்கு 1.2 லட்சம் பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

Next Story