வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாக முன்மாதிரி பள்ளியாக மாற்றம் 24–ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என கலெக்டர் அறிவிப்பு
வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாக முன்மாதிரி பள்ளியாக மாற்றம் செய்யப்படுகிறது. வருகிற 24–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட தொடங்கும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பெரும்பாலாக கிராமங்கள் உள்ளதால் பல மாணவர்களின் கல்வி, அரசு பள்ளிகளை நம்பியே உள்ளது. எனினும் பல இடங்களில் மாணவர்கள், தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளி அமைக்க கலெக்டர் கந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை தேர்வு செய்தார்.
இதனையடுத்து அந்த பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக, பல்வேறு நவீன வசதிகளுடன் கொண்ட முன்மாதிரி பள்ளியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக முன்மாதிரி பள்ளியாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தேர்வு செய்தோம். இந்த பள்ளியில் 56 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாடலான டி–சர்ட் போன்ற சீருடை வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில வழிக்கல்வி, பயோ மெட்ரிக் முறையில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, வண்ணமயமாக்கப்பட்ட ஓவியங்கள் கொண்ட பள்ளி வளாகம், சுத்தமான குடிநீர், நவீன கழிவறை, மாணவர்களுக்கு தனியாக ஒரு அலமாரி, விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் உயிரினங்கள் மீது ஆர்வம் கொள்வதற்காக பறவைகள் வளர்ப்பு கல்வியும் கற்பிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.17லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 24–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் முன்மாதிரி பள்ளியாக இப்பள்ளி செயல்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.