கடந்த 5 மாதங்களில் ரெயிலில் அடிபட்டு 247 பேர் பலி சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் தகவல்
கடந்த 5 மாதங்களில் ரெயிலில் அடிபட்டு 247 பேர் பலியாகி உள்ளனர் என்று சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து உள்ளார்.
சூரமங்கலம்,
சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் சீனிவாசராவ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் தண்டவாளத்தை கடப்பதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ரெயிலில் அடிபட்டு 468 பேர் இறந்தனர். 2018-ல் 456 ஆக குறைந்தது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை 247 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். இந்த உயிர் இழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது அடிபட்டு இறந்தவர்கள் 80 சதவீதமும், ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர்கள் 9.7 சதவீதமும், ரெயிலில் பயணம் செய்யும் போது இயற்கை மரணம் அடைந்தவர்கள் 2.8 சதவீதமாக உள்ளது.
ரெயில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 150 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story