நீர்மட்டம் குறைந்து வருவதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்


நீர்மட்டம் குறைந்து வருவதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. அதோடு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.

47.50 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

கீழணையில் இருந்து தண்ணீர் வராததாலும், லால்பேட்டையில் வெயில் சுட்டெரிப்பதாலும், சென்னைக்கு குடிநீர் தினமும் அனுப்பி வைப்பதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.06 அடியாக இருந்தது. இதனால் நேற்று சென்னை குடி நீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 39 அடியாக இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்க முடியும். தற்போது 43.06 அடி நீர்மட்டம் இருப்பதாலும், ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதாலும் ஏரி நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதன்காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதில் இன்னும் சில நாட்களில் சிக்கல் ஏற்படும் என்றார்.

Next Story