சிதம்பரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி நிதி நிறுவன மேலாளர் கைது


சிதம்பரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி நிதி நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 3:30 AM IST (Updated: 20 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இதற்கு கிளை அலுவலகம் சீர்காழியிலும், வசூல் மையம் நெய்வேலியிலும் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஏலச்சீட்டுகள் நடத்தப்பட்டது. இதில் சிதம்பரம், நெய்வேலி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சந்தாதாரர்களாக சேர்ந்து சீட்டு பணம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனம் சார்பில் மாதந்தோறும் நடந்த ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லையாம். அந்த வகையில் சந்தாதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சுமார் 45 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குனரான சிதம்பரத்தை சேர்ந்த விஜயா, அவரது கணவரும் நிறுவன மேலாளருமான செந்தில்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இது தொடர்பாக சிதம்பரத்தை சேர்ந்த அங்காளன்(வயது45) உள்பட 20 பேர் கடலூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் விஜயா, செந்தில்குமார் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கில் நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமாரை(40) இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், பரமேஷ்வரன் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் நேற்று முன்தினம் கடலூரில் கைது செய்தனர். இந்த நிதி நிறுவ னத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் வேறு யாரேனும் இருந்தால் அவர்கள் கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story