திண்டிவனம் அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த அண்ணன் கைது


திண்டிவனம் அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த அண்ணன் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 33). இவரை அவருடைய பெற்றோர், கடந்த 2002-ம் ஆண்டு ஊரல் கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது சாந்திக்கு தாய் வீட்டு சீதனமாக 7½ சென்ட் நிலத்தை கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு சாந்திக்கு குழந்தை இல்லாததால் விவாகரத்து பெற்று சாந்தி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

அதன் பிறகு 2012-ம் ஆண்டு திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டையை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சாந்தியை திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் அதே பகுதியில் புதியதாக வீட்டுமனை வாங்குவதற்காக சாந்தி தனது அண்ணனான திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் வசித்து வரும் நாகப்பன் (53) மற்றும் அண்ணி ஜெயலட்சுமி ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார்.

அப்போது சாந்தியிடம் ஏற்கனவே உள்ள 7½ சென்ட் நிலத்தை விற்றுத்தருவதாக கூறிய நாகப்பன், ஜெயலட்சுமி ஆகிய இருவரும் சாந்தியிடம் இருந்து நிலத்திற்குரிய அசல் பத்திரத்தை வாங்கிக்கொண்டனர்.

அதன் பின்னர் அந்த நிலத்தை ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 500-க்கு விலை பேசி ஊரல் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்தனர். தொடர்ந்து, சாந்தி வீட்டிற்கு நாகப்பன், ஜெயலட்சுமி ஆகிய இருவரும் சென்று அவருடைய கணவர் பெருமாளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 500-ஐ சாந்தியிடம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். பணத்தை தரும்படி சாந்தி கேட்டதற்கு இருவரும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாந்தி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் நாகப்பன், ஜெயலட்சுமி ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து நாகப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை திண்டிவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயலட்சுமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story