மணப்பெண்ணின் நகை திருட்டு: அழகுக்கலை பெண் நிபுணர் கைது


மணப்பெண்ணின் நகை திருட்டு: அழகுக்கலை பெண் நிபுணர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 3:30 AM IST (Updated: 20 Jun 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் நகையை திருடிச்சென்ற அழகுகலை பெண் நிபுணரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் ராமு (வயது 60). இவருடைய மகள் ஜனனிக்கு கடலூர் பாரதிசாலையில் உள்ள மண்டபத்தில் சம்பவத்தன்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்துக்காக இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர்.

அதையடுத்து மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வதற்காக அழகுக்கலை நிபுணர் கடலூர் உப்பலவாடியை சேர்ந்த பாபு மனைவி சுகுணா(32) வந்திருந்தார். இவர் மணமகள் அறையில் ஜனனியை அலங்கரித்து மண மேடைக்கு அனுப்பி வைத்தார். அப்போது நெக்லஸ், 4 மோதிரங்கள் என 6¼ பவுன் நகைகளை கழற்றி அறையிலேயே வைத்து விட்டதாகவும், அதை எடுத்து வருமாறும் ஜனனி தனது தந்தையிடம் கூறினார்.

இதையடுத்து ராமு மணமகள் அறைக்கு சென்று நகைகள் வைத்திருந்த இடத்தை பார்த்தார். ஆனால் அங்கே நகைகளை காணவில்லை. அதற்குள் யாரோ நகைகளை திருடிச்சென்று விட்டனர். இதற்கிடையே அந்த அறையில் சுகுணா மட்டும் நின்று கொண்டிருந்தார். அவரிடம் கேட்ட போது நகைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டார்.

இருப்பினும் ராமுவுக்கு சுகுணா மீது சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுகுணாவை பிடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, திருமணத்தின் போது எடுத்த வீடியோவை ஆய்வு செய்த போது, அதில் அவர் தான் நகைகளை எடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரும் நகைகளை திருடியதை ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்த போது, நகைகள் இடையூறாக இருக்கும் என்று கூறி கழற்றி வைக்க சொல்லி விட்டு, பின்னர் அந்த நகைகளை திருடியதாக சுகுணா தெரிவித்தார். நெக்லசை இம்பீரியல் சாலையில் உள்ள அடகு கடையிலும், மோதிரங்களை புதுச்சேரிக்கு சென்று உருக்கி கட்டியாகவும் வைத்திருந்தார். அந்த நகைகளை போலீசார் அவரிடம் இருந்து மீட்டனர். இவர் மீது ஏற்கனவே சேத்தியாத்தோப்பில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story