புதிதாக கட்டிய கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது


புதிதாக கட்டிய கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 7:16 PM GMT)

புதிதாக கட்டிய கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்மணி(வயது 55). இவர் திருவானைக்காவல் பகுதியில் புதிதாக 2 கடைகளை கட்டி இருந்தார். அந்த கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க ஸ்ரீரங்கம் சீனிவாச்சாரியார்ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவானைக்காவல் பிரிவு உதவி மின் பொறியாளர் தியாகராஜனை(39) அணுகினார். ஆனால் அவர் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்மணி இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்த கண்மணி நேற்று மாலை உதவி பொறியாளர் தியாகராஜனிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி ஆகியோர் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அதே அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story