திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல்


திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 7:22 PM GMT)

திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்க நிர்வாகம் ஒப்புதல் வாங்கி உள்ளது. மேலும் ‘லிப்ட்’ வசதியும் வருகிறது.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அழகுபடுத்தும் விதத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்தில் இருந்து கல்லுக்குழி வரை நடைபாதை மேம்பாலம் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முதலாவது நடைமேடை முதல் 6,7-வது நடைமேடைகள் வரை பயணிகள் ஏறி, இறங்கி செல்லும் வகையில் இந்த நடைபாதை மேம்பாலம் உள்ளது. மேலும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் 8-வது நடை மேடையிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்கனவே முன்கூட்டி திட்டமிடப்பட்டு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடைபாதை மேம்பால படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மாற்று வசதியாக அதன் அருகே நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கப்படும் என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி ரெயில்வே பார்சல் அலுவலகம் அருகே ஒரு நகரும் படிக்கட்டுகளும், 8-வது நடைமேடையில் ஒரு நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளது. தலா ரூ.1 கோடியில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் நகரும் படிக்கட்டுகளின் அருகே ‘லிப்ட்’ வசதியும் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. பயணிகள் ‘லிப்ட்’ மற்றும் நகரும் படிக்கட்டுகள் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல பார்சல் அலுவலகம் அருகே டிக்கெட் வினியோக மையமும் அமைக்கப்பட உள்ளது. நடைபாதை மேம்பாலம் வழியாக செல்பவர்கள் இதில் டிக்கெட் பெற்று ரெயிலில் பயணிக்க முடியும். தற்போது உள்ள டிக்கெட் மையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நடைபாதை மேம்பாலம் வழியாக செல்பவர்களுக்கு வசதியாகவும் இந்த டிக்கெட் வினியோக மையம் அமைக்கப்பட உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் அனைத்தையும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

Next Story