24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் கலெக்டர் தகவல்
24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா மணலூர்பேட்டை சாலையில் சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் ஏரிக்கரையில் 24 இருளர் குடும்பங்கள் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இதற்கு முன்பாக இக்குடும்பத்தினர் கீழ்அனக்கரை பகுதியில் சாலையோரம் வசித்து வந்துள்ளார்கள். இந்த பகுதியில் வசிக்கும் இருளர் குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் கலெக்டர் கந்தசாமி நேற்று இருளர் குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர்கள் வசித்து வரும் ஏரிக்கரை நீர்நிலை என்பதால் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் கலெக்டர் கந்தசாமி, மக்களிடம் கனந்தாம்பூண்டி பகுதியில் இடம் ஒதுக்கித் தருவதாகவும், அந்த இடத்தில் 24 இருளர் குடும்பங்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் வீடு கட்டித்தருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது அப்பகுதியில் வசிக்கும் மஞ்சுளா என்பவர் தான் எம்.ஏ. (பொருளாதாரம்) படித்து இருப்பதாகவும், தனது தந்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். எனவே, தனக்கு ஏதாவது ஒரு வேலை பெற்றுத்தருமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் அருகில் சமூகநலத்துறை சார்பாக பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story