மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி பெண்கள் சாலை மறியல்
மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் கூடலூர், கடம்பூர், களிவந்தப்பட்டு, சட்டமங்கலம், பேரமனூர், தைலாவரம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், வல்லாஞ்சேரி, கோணாதி, திருக்கச்சூர், செங்குன்றம், நின்னைக்கரை, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கோடை காலத்தில் வருடந்தோறும் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவில்லை.
மறைமலைநகர் 7–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த 3 மாதங்களாக மறைமலைநகர் நகராட்சியில் உள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது நகராட்சி அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இதன் காரணமாக தற்போது 7–வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீருக்காக தினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7–வது வார்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் நேற்று காலை மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து பெண்கள் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். உடனே நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று பெண் அதிகாரி உறுதி அளித்தார். இதனையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.