திருப்போரூர் அருகே லாரி மோதி சிறுவன் பலி; தந்தை கண் எதிரே பரிதாபம்
திருப்போரூர் அருகே தந்தை கண்எதிரே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுவன் பலியானான்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மானாமதி அடுத்த ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற கோபால் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு விமல் (13), விணு (8) என 2 மகன்கள் இருந்தனர். இதில் விமல் மானாமதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பும், விணு 2–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று காலை விமலுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே லோகநாதன் விமலை ஆஸ்பத்திரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். சிறுவன் விணுவும் உடன் சென்றான்.
அங்கு சிகிச்சை முடிந்து மானாமதி பஸ்நிறுத்தம் அருகில் உள்ள மருந்துகடையில் மருந்து வாங்கிக்கொண்டு புறப்பட தயாராகினர். அப்போது திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விமலின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. தலை நசுங்கிய சிறுவன் விமல் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் லோகநாதனின் கால் நசுங்கியது. சிறுவன் விணு லேசான காயத்துடன் உயிர் தப்பினான். லோகநாதனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு வேகமாக சென்ற லாரியை பொதுமக்கள் துரத்திப்பிடிக்க முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
காலை 10 மணிக்கு நடந்த விபத்து தொடர்பாக மானாமதி போலீசார் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பகல் 1.30 மணியளவில், மானாமதி பஜார் வீதி திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத பொதுமக்கள் சுமார் 3 மணி நேரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.