கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 20 Jun 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் சேகண்யம் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று காலை மங்காவரத்தை சேர்ந்த மணி (வயது 58) என்பவர் கடையின் முன்புறம் சுத்தம் செய்வதற்காக வழக்கம் போல் அங்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேற்பார்வையாளர் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து குமார் அங்கு நேரில் வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அங்கு இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களையும், கல்லாவில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் சில்லரை காசுகளையும் திருடிச் சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு போன மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 ஆயிரம் அதே சமயத்தில் நேற்று முன்தினம் இரவு கடையில் மது விற்பனையான ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தை மேற்பார்வையாளர் குமார் தனது வீட்டுக்கு எடுத்து சென்றதால் அந்த பணம் தப்பியது.

சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். டாஸ்மாக் கடையின் பூட்டுகளை அருகே உள்ள வயல்வெளியில் மர்ம நபர்கள் வீசி சென்றிருப்பதும், சம்பவத்திற்கு பிறகு நள்ளிரவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த வழியாக ஆட்டோவில் இங்கும் அங்குமாக சுற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சப்–இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கடந்த 14–ந்தேதி நள்ளிரவிலும் மேற்கண்ட டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story